Monday, November 21, 2011

மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் சேர்க்க உத்தரவு



சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் புதன்கிழமைக்குள் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. பணிநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நலப் பணியாளர் சங்கம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை கடந்த 11 ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுகுணா, பணி நீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் அவர்கள் தங்கள் பணியில் தொடரவேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் பணிநீக்க ஆணையினை தமிழக அரசு திரும்பப் பெறவில்லை. இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சங்கத்தின் மக்கள் நலப் பணியாளர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள் நீதிமன்ற உத்திரவை அரசு அமல்படுத்தவில்லை, எனவே நீதிமன்ற அவமதிப்புக்குற்றத்திற்கு அரசு ஆளாகிறது என்றனர்.

பணியாளர் சங்கம் விதிமுறைகள் படி செயல்படவில்லை. தவிரவும் முறைகேடான வழியில் இவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றனர், வேண்டுமானால் இன்றே இறுதி விசாரணை வைத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இடைக்காலத்தடையை மதிக்காது அவமதிப்புக்குற்றம் புரிந்திருக்கும் அரசுக்கு உடனடியாக இறுதி விசாரணை கோரும் உரிமை இல்லை என்று பணியாளர் தரப்பில் சொல்லப்பட்டது.

இறுதியில் நீதிபதி சுகுணா புதன்கிழமைக்குள் அனைவரும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும், தகவலையும் நீதிமன்றத்திடம் தெரிவிக்கவேண்டும், என உத்திரவிட்டு, விசாரணையினை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.