Monday, February 4, 2013

மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் - எஸ். ரவி, சென்னை.



"பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம்' தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிலும் குறிப்பாகப் படித்தவர்களிடம் காணப்படவில்லை. அரசு அலுவலகங்களில் உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகளில்கூட பலர் இதைப்பற்றி அறிந்து வைத்திருக்கவில்லை. இது தொடர்பான அரசு ஆணை விவரத்தை வலைதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் இச்சட்ட விதியின் பயனை பயனாளிகளாகப் பயன்படுத்திக்கொள்ள யார் தயவையும் நாடத் தேவையில்லை. மாவட்ட ஆட்சியர் இச்சட்ட அமல் தொடர்பான "டிரிப்யூனல்' அதிகாரியாவார்; வருவாய் கோட்ட அலுவலர், சமூக நல அதிகாரி, சமரசம் செய்யும் அதிகாரி (கான்சிலியேஷன் ஆஃபிசர்), வட்டாட்சியர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது நிர்வாகம்) ஆகியோர் இந்தச் சட்ட விதிகளை அமல்படுத்துவதற்கான முக்கிய அதிகாரிகள்.

மனு தர விரும்புவோர் தாங்கள் வசிக்கும் வசிப்பிட எல்லைக்குள்பட்ட அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் குறைகளைத் தெரிவிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைக்காக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்தோ பரிந்துரையோ தேவையில்லை. அதே போல உள்ளூர் பஞ்சாயத்து அலுவலக நிர்வாக அதிகாரி, காவல்துறை அதிகாரி, வழக்கறிஞர் போன்றோரின் உதவியும் சான்றொப்பமும் தேவையில்லை.

ஆயினும் இவ்விதி குறித்து நன்கு தெரிந்த வழக்குரைஞர் மேற்பார்வையில் விண்ணப்பிப்பது நல்லது.

மூத்த குடிமக்கள் அல்லது பெற்றோர் இந்தச் சட்டப்படி தங்களுடைய வாழ்க்கைக்கான பராமரிப்புப் படியைத்தான் கோருகின்றனர்.

கணவரின் இறப்புக்குப் பிறகு கணவரின் சொத்தில் பங்கு உண்டு என்று கோரும் மருமகள் தனது மாமியாரையும் பேணிக்காக்க வேண்டிய பொறுப்புடையவராகிறார். மருமகளால் மாமியார் தனித்துவிடப்பட்டு பராமரிக்கப்படாவிட்டால் இவ்விதி பாயும்.

பெற்றோருக்கு ஓய்வூதியம் இல்லாவிட்டாலும், மாதச் சம்பளம் வாங்கும் மகன் அல்லது மகன்கள் அவர்களைத் தள்ளாத வயதில் பராமரிக்காமல் விடமுடியாது. அவர்கள் மீதும் புகார் செய்ய இச் சட்டம் வழி செய்கிறது.

நிலம், வீடு போன்ற சொத்துகள் இருந்தாலும் ஓய்வூதியம் வாங்கினாலும் அவற்றையெல்லாம் தங்கள் வசப்படுத்திக்கொண்டு பெற்றோரை அல்லது மூத்த வயதினரான குடும்ப உறவினரைப் பட்டினிபோட்டுத் துன்புறுத்தும் "வாரிசுகள்' மீதும் புகார் செய்து நிவாரணம் பெற முடியும்.

பட்டினி போட்டு வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்தாலும் மனதளவிலும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்தாலும் அதுபற்றியும் முறையிட்டு நிவாரணம் பெறலாம்.

தமிழக அரசு உருவாக்கியுள்ள இந்த விதியானது பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது சிவில், கிரிமினல் வழக்கு என்று செல்லத் தேவையில்லாத, எந்தவித சிபாரிசும் தேவைப்படாத ஆணையாகும்.

மூத்த குடிமக்கள் அளிக்கும் புகார் மனுவுக்குப் பதில் சொல்ல "எதிராளி' ஆஜர் ஆகாது போனால் மாவட்ட ஆட்சியரே அடுத்த நடவடிக்கையை எடுக்க முடியும்.

மூத்த குடிமக்கள் முதலில் மாவட்ட சமூக நல அதிகாரியிடம் மனு மூலம் புகார் அளிக்க வேண்டும். அவர் அதை வருவாய் கோட்ட அதிகாரிக்கு அனுப்புவார். அவரே விசாரித்து நீதி வழங்குவார்; இல்லையெனில் ஆட்சியருக்கு அனுப்புவார். "பிரதிவாதி' விசாரணைக்கு வராவிட்டால் ஆட்சியர் "எக்ஸ்பார்ட்டி' தீர்ப்பு வழங்கலாம்.

எனவே, அவர்கள் விசாரணைக்கு வராமல் ஏமாற்ற முடியாது, தப்பிக்கவும் முடியாது.

மனுதாரர்கள் தங்களுக்குப் பராமரிப்புப் படி தேவை என்று விண்ணப்பித்தால் போதும். மேல் விசாரணைக்குத் தேவைப்படும் ஆவணங்கள் எவை அல்லது தகவல்கள் என்ன என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரியே தெரிவிப்பார்.


www.tn.gov.in / stationaryprinting/extraordinary/2009/352-ex-iii-1a.pdf  

                                                                           
நன்றி ;- கருத்துக்களம், தினமணி, 04-02-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.