Thursday, June 1, 2017

மரண வலியின் கதறல்கள்!

அரசு மனது வைத்தால் பல உயிர்களின் வலியைக் குறைக்கலாம்

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பேர் வலியால் துடிதுடித்துச் சாகிறார்கள். வலியால் என்றால் தாள முடியாத மரண வலியால். புற்றுநோய், சிறுநீரக முடக்கம், எச்.ஐ.வி. பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி நாட்களை அருகிலிருந்து பார்த்தவர்களுக்கு இந்தக் கொடுமை கொஞ்சம் புரிந்திருக்கும். தாளமுடியாத வலி.. மரண வலி!

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏழைகள். ஒரு கட்டிலுக்கோ, ஒற்றை ‘பாரசிட்டமால்’ மாத்திரைக்கோ வழியில்லா தவர்கள். மலஜலத்தைச் சுத்தம் செய்யக் கூட ஆளில்லாமல், ஒரு விலங்கைப் போலக் கிடப்பவர்கள். அதில் சிலர் ஊனமுற்றோராகவும், பார்வையற்றோரா கவும் இருப்பது இன்னும் கொடுமை. உயிருக்கு நெருக்கமானவர்களை இப்படித் துடிதுடிக்கப் பார்த்து தன் இயலாமையை நினைத்து வருந்தும் குடும்பத்தினரும் உண்டு. இதில் சட்டவிரோத கருணைக் கொலைகளும்கூட நடப்பதாகச் சொல்கிறார்கள்.

உதவும் மனங்கள்

இதுபற்றி ஒரு நாள் பேசிக்கொண்டு இருந்தபோது நண்பர் மணிகண்டன் சொன்னார், பார்வையும் சுயநினைவும் இழந்த வயதான பெண் ஒருவரைச் சொந்த மகனே சாலையில் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போய்விட்டார். அவரை மதுரை கடச்சனேந்தலில் உள்ள ‘நேத்ராவதி வலி நிவாரணம் மற்றும் பராமரிப்பு மையம்’தான் மீட்டுப் பராமரித்தது. தொடர் சிகிச்சையால் கண் பார்வையும், நினைவும் திரும்பிய பிறகு, அந்தப் பெண் வீட்டுக்குப் போக விரும்ப, அந்தப் பையனே பாசத்தோடு தாயை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்று சொன்னார். நோயுற்ற ஏழை முதியோருக்குச் சிகிச்சை அளிக்கவும், சாகும் வரையில் வலியின்றிப் பேணவும் எனக்குத் தெரிந்து தென்மாவட்டத்தில் உள்ள ஒரே தனியார் இலவச மையம் இதுதான் என்றார் அவர்.

சில நாட்களிலேயே அந்த மையத்தைப் பார்க்கப் போனேன். கொஞ்சம் பழைய பள்ளிக் கட்டிடம்போல இருந்தது. மொத்தம் நான்கு அறைகள். அதில் மூன்று அறைகளில் படுக்கைகள். ஓர் அறை செவிலியர் நிலையம் மற்றும் சமையலறையாக மாற்றப்பட்டிருந்தது. மருத்துவருக்கெனத் தனி அறை இல்லாததால், நோயாளிகள் படுத்திருக்கும் ஒரு அறையையே பாதியாகப் பிரித்து மேஜை போட்டிருந்தார்கள். பொதுக்கழிப்பறை மட்டும்தான்.

படுக்கையிலேயே மலம் கழித்துவிட்ட ஒரு முதியவரைச் சுத்தம் செய்து, ‘டயாப்பர்’ மாற்றிக்கொண்டிருந்தார் செவிலியர் ஒருவர். வலி நிவாரணம் அளித்தும் தாங்க முடியாத வேதனையில் முணுமுணுத்துக்கொண்டிருந்தார் ஒருவர். நெற்றி நிறைய விபூதி பூசியிருந்த பாட்டி கையெடுத்துக் கும்பிட்டார். 102 வயதுப் பாட்டி ஒருவர், குறுகிப்போய் ஏழு வயதுப் பெண் குழந்தையைப் போல வாசலில் உட்கார்ந்திருந்தார். சேலையோ, நைட்டியோ அணிய மறுத்து, சிறு போர்வையை மட்டும் மடியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். “அவர் ஒரு குழந்தை சார். கண்ணுகூடச் சிரிக்கும். ‘அங்கே போ.. இங்கே போ.. டிரஸ் போடு’ என்றால் அவருக்குக் கோபம் வரும் சார். அதனால் நாங்கள் தொந்தரவு செய்வதில்லை” என்றார் ஊழியர் வினோத்.

உண்மையான சேவை

மருத்துவத்துக்குப் படித்தது சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல என்று உணர்ந்த மனிதநேயமிக்க மருத்துவர்கள் கூட்டாக நடத்துகிற மையம் இது. தினமும் ஒரு மருத்துவர் வீதம் சுழற்சி முறையில் வந்து நோயாளிகளைப் பார்க்கிறார்கள். இரவும் பகலும் செவிலியர்களும் மற்றவர்களும் இருக்கிறார்கள். நோயாளிகளின் பாதிப்புக்கேற்ப கண், எலும்பு, இதயம், சிறுநீரகம், மூளை நரம்பு சிறப்பு மருத்துவர்களும் அவ்வப்போது வருவதுண்டு. பணியில் இருந்த மருத்துவர் பாலகுருசாமியிடம் பேசியபோது, “நம்மை மருத்துவர்களாக்கிய இந்தச் சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்த இளம் மருத்துவர்களின் யோசனைதான் சார் இது. ஆரம்பத்தில் கிராமங்கள்தோறும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தினோம். முகாமுக்குக்கூட வர முடியாத நிலையில் வீட்டில் முடங்கிக் கிடந்தவர்களையும் தேடிப்போய் சிகிச்சை கொடுத்தோம். தீர்க்க முடியாத நோய் உள்ளவர்கள் பலரை அவர்கள் குடும்பத்தினர் அப்படியே கைவிட்டுள்ள சூழல் சகித்துக்கொள்ள முடியாமலிருந்தது. தினமும் போய் சிகிச்சை அளிப்பதும் சிரமம் என்பதால், அவர்களை எல்லாம் ஒரே இடத்தில் வைத்துப் பராமரித்தால் என்ன என்று தோன்றியது. மருத்துவர்கள் எல்லாம் ஒப்புக்கொண்டதும், இந்த மையத்தைத் தொடங்கினோம்” என்றார்.

முன்பு பள்ளியாக இருந்த ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மருத்துவமனையாக்கி இருக்கிறார்கள். இப்போது நோய் முற்றிய நிலையில் 20 பேர் இங்கு இருக்கிறார்கள். “வலிக்குறைப்பு சிகிச்சை செய்து, ஆற்றுப்படுத்தி சாகும் வரையில் அவர்களைப் பராமரிக்கிறோம். எதற்கும் பணம் வசூலிப்பதில்லை. எங்கள் சேவையை உணர்ந்து, தேவையான பொருட்களை கொடையாளர்களே வாங்கித்தந்து விடுகிறார்கள். கிடைக்காத பொருட்களை நாங்களே வாங்கிக்கொள்கிறோம். பெரும்பாலான நோயாளிகள் படுத்த படுக்கையாக இருப்பதால், ‘டயாப்பர்’கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. யாராவது வாங்கித்தந்தால் புண்ணியமாக இருக்கும்” என்றார் பாலகுருசாமி.

அரசு கவனிக்குமா?

மதுரை திருநகரைச் சேர்ந்த ஜனார்த்தனன், தொலைத்தொடர்புத் துறையில் உதவிப் பொதுமேலாளராக இருந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி ஜைலஜா. குழந்தைப்பேறு இல்லாததை நேர்மறையாக எடுத்துக்கொண்டு, தங்கள் வருமானத்தை எல்லாம் ஏழைக் குழந்தைகளின் படிப்பு, ஏழை முதியோரின் சிகிச்சை, ஆதரவற்றோரின் ஈமச் சடங்குக்குச் செலவிடுபவர்கள். இவர்கள் முதியோர் இல்லத்துக்கென, தங்களது சேமிப்புப் பணத்திலிருந்து மதுரை விளாச்சேரியில் 27.5 சென்ட் இடம் வாங்கி வைத்திருந்தார்கள். வயதாகிவிட்ட சூழலில், நல்ல நோக்கமுள்ள வேறு யாரிடமாவது இதனை ஒப்படைத்துவிடலாம் என்று நினைத்த இவர்கள், இந்த மையத்தைப் பற்றி அறிந்து நிலத்தை ஒப்படைத்ததுடன், தங்கள் செலவிலேயே பத்திரமும் பதிவுசெய்து கொடுத்திருக்கிறார்கள்.

இப்போது அதில் கட்டிடம் கட்டும் முனைப்பில் இறங்கியிருக்கிறார்கள். யார் உதவியையேனும் பெற்று இதைச் செய்துவிட நினைக்கிறோம். பெரிய உபகாரம் இது என்கிறார்கள். என்னால் இயன்ற ஒரு சிறு தொகையைத் தந்துவிட்டு வந்தேன். ஈரக்குலை நடுங்குவதுபோல் இருக்கிறது.

தனியார் அமைப்புகளால் இப்படி எத்தனை நோயாளிகளைப் பராமரித்து விட முடியும்? அரசாங்கமே ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற மையங்களைத் தொடங்கி, பொறுப்பான தன்னார்வலர்களுடைய உதவியுடன் நடத்தினால் உண்மையிலேயே தேவையுள்ள அத்தனை பேரையும் சேவை எட்டும். இன்றைய குடும்ப, வாழ்க்கைச் சூழலில் நாளை நமக்கேகூட இந்த மையம் பயன்படலாம்!

மனது வைக்குமா மாநில அரசு?

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.